சென்னை: மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல், நகர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டுகிறது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை உருவாக்குதல், மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை ஒழித்தல், நவீன குப்பை மேலாண்மையை செயல்படுத்துதல், தூய்மை சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் முதலியன முக்கியமான நோக்கங்களாகும்.
இத்திட்டத்தில் இந்தியா முழுவதிலுமுள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இத்தரவரிசை பட்டியலில் பெருநகர சென்னை மாநகராட்சி கலந்துகொண்டு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் விருது பெற்றுள்ளது.
தூய்மையான இந்தியாவை உருவாக்க பொதுமக்களின் எண்ணத்திலும், செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரப்படுகிறது.