சென்னை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், பொது நூலகத்துறை இயக்குநரகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை ஜனவரி 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகக் கண்காட்சியில், பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெய்ன், ஸ்வீடன் உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்காக தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 16ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 30 நாடுகளில் இருந்து அமைக்கப்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வேறு மாெழிகளில் மொழிபெயர்க்கவும், அதற்கான காப்புரிமை குறித்தும் பதிப்பாளர்கள் கலந்துரையாடி உள்ளனர். இந்த நிலையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜன.18) நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, 'தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 30 நாடுகளில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் இதற்கு திட்டமிட்டோம். 40 நாட்களில் செஸ் ஒலிம்பியாட் நடத்த திட்டமிட்டு, அதனை சிறப்பாக நடத்தினோம். அதேபோல் சர்வதேச புத்தக்கக் கண்காட்சியையும் நடத்தி உள்ளோம்.