இடைநிலை ஆசிரியர்கள் கைது.. பேருந்தில் ஏற்றி அலைக்கழிக்க விட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு! சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (அக்.5) பேராசிரியர் அன்பழகனார் பள்ளி வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து, சென்னையில் உள்ள 7 மண்டபங்களில் போலீசார் தங்க வைத்தனர். பின்னர், இரவு 7 மணியளவில் ஆசிரியர்களை விடுவித்து சொந்த ஊருக்குச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லாமல், நேற்று இரவு 10 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தின் அருகில் சாலை ஓரமாக அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர், போராட்டம் நடத்திய ஆசிரியர்களை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இருப்பினும், போராட்டம் தொடரும் எனக் கூறியதால் பேருந்திற்காக காத்திருந்த ஆசிரியர்களை காவல் துறையினர் தங்களின் வாகனத்தில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் வாகனத்தில் ஏற்றி, இரவு முழுவதும் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை அலைக்கழித்து இறக்கி விட்டதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க:“சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுப்பது முக்கியமானது” - சென்னை உயர் நீதிமன்றம்
அதிலும், பெண் ஆசிரியைகளுக்கு கழிப்பறை வசதி இன்றியும், பல ஆசிரியர்கள் மயக்கம் அடைந்த நிலையிலும் காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், ஆசிரியர்களை மரியாதைக்குறைவாக திட்டியும், வீடியோ எடுப்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி, கைப்பேசியைப் பிடுங்கி எறிவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக காவல்துறை மீது ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், பேருந்தில் அழைத்துச் சென்று “நீங்கள் சொந்த ஊருக்குச் செல்வது என்றால் இறக்கி விடுகிறோம், இல்லை என்றால் இறக்கி விடமாட்டோம்” என்று விழுப்புரம் வரை அழைத்துச் சென்று ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளனர். இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானோம் எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அற வழியில் போராடிய ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் வைத்து காவல்து றையினர் கைது செய்ததற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க:“பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை எனில் முக்காடு போராட்டம்” - பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவிப்பு!