சென்னை:திருவண்ணமலையில் கிரிவலப் பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், ’வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால் அங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும்’ எனவும் கூறப்பட்டுள்ளது.
சிலை அமைக்கப்பட உள்ள இடம் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் நிர்வகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு விற்கப்பட்டு, 215 சதுர அடி என பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும்; வருவாய்த்துறையினர், அமைச்சர் வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து முறைகேடாக பட்டா வாங்கியுள்ளதாகவும் அம்மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமையவுள்ள இடம் இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (மே 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிய தகவல்களை பெற வேண்டியுள்ளதாலும் அவகாசம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமையவுள்ள இடம் மாவட்ட ஆட்சியரின் இந்த மனு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்களைச் சேகரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அதுவரை, குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எ.வ.வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை!