முழுநேர தற்காலிக ஊழியர்களாக பணியாற்றியவர்களை பணிநீக்கம் செய்து எல்ஐசி நிர்வாகம் 1991ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட முழுநேர தற்காலிக ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இதனடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்களின் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், எல்ஐசிக்கு உதவியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று செப்டம்பர் 17ஆம் தேதி ஆன்லைனில் அறிவிப்பாணை வெளியானது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட முழுநேர தற்காலிக ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.