கடந்தாண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது பொதுமக்கள், தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதற்கிடையே இது குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்பி தயாநிதி மாறன், "அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவரை சிபிஐ விசாரணைக்குள்படுத்த வேண்டும்.
பல தடைகளைத் தாண்டி படித்துவரும் மாணவர்களின் கனவுகளை அரசு கேலிக்கூத்தாக்கிவருகிறது" என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கானது எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இது நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது தயாநிதி மாறன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், இந்த வழக்குத் தொடர அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என்றும் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் எனவே வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டதாக சேத்துப்பட்டு காவல் நிலைத்தில் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் தயாநிதி மாறன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.