விசிக தலைவர் திருமாவளவனை தமிழ்நாடு பாஜகவினர் விமர்சித்து பேசி வந்ததைக் கண்டித்து, விசிகவினர் கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் முன் கடந்த அக்டோபர் மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி, விசிகவினர் 20 பேர் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, விசிகவை சேர்ந்த இலக்கியன் உட்பட 20 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், போராட்டத்தின்போது எந்த வன்முறையும் ஏற்படாத நிலையில், விசிகவினர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், கோவை நீதிமன்றத்தில் விசிகவினர் 20 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பம் இல்லை: நீதிமன்றத்தில் அரசு தகவல்!