திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 2017ஆம் ஆண்டு நியாயவிலை பொருள்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, பந்தலடி ரேஷன் கடை எதிரில் எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட 60 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இது தொடர்பான வழக்கு மன்னார்குடி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த நிலையில் டி.ஆர்.பி. ராஜா தவிர மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
தன் மீதான வழக்கை மட்டும் திருவாரூரில் எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்தும், அதில் முன்னிலையாக அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.பி. ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பி. ராஜா தரப்பில் மக்கள் பிரச்சினைகளுக்காக ஒரு இடத்தில் கூடுவது சட்டவிரோதமான ஒன்று எனக் கூற முடியாது.
வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் வேறு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால் அதன் பலன் தனக்கும் ஏற்புடையது என்பதால், தன் மீதான வழக்கை மட்டும் பிரிப்பது தவறானது என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, திருவாரூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் முன்னிலையாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு விலக்கு அளித்ததுடன், அந்த வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவ்வழக்கு குறித்து மன்னார்குடி நகரக் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.