சென்னை:சென்னைப் பல்கலைக்கழகத்தினை நிர்வகிக்க உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்தி தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட கௌரியின் மூன்றாண்டு பதவிக் காலம் நாளையுடன் (ஆகஸ்ட் 19) முடிவடைகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2020 ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் கெளரி நியமனம் செய்யப்பட்டார். அவர் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று 37 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்திருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் மல்டி மீடியா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உற்பத்தி என்ஜினீயரிங் துறையில் கவுரவ பேராசிரியராகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கெளரி பதவி ஏற்ற பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், சில சீர்திருத்தங்களையும் செய்தார். இவரின் பதவிக் காலம் ஆகஸ்ட் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது.