சென்னை:தமிழ்நாடு அளவில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று முதலமைச்சர் கோப்பை விருது தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும். நடப்பாண்டில் இந்த விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார்.
அதேபோல் இந்த ஆண்டும் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்தல், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் சிறந்து விளங்கிய காவல் நிலையம் எது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சிபிசிஐடி ஐஜி சங்கர், டிஐஜி செந்தில் குமார் உள்பட நான்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கடந்த ஆண்டு மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் உடனடியாக டெல்லி, புனேவிற்கு சென்று குற்றவாளியை கண்டுபிடித்த யானைகவுனி காவல் நிலையம் மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பரிந்துரை செய்துள்ளார். இதனை தவிர சேலம், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, டிவி மலை டவுன், சாய் பாபா காலனி உள்பட 10 காவல் நிலையங்கள் போட்டியில் உள்ளன.
இந்தப் பட்டியலை ஆய்வு செய்து அவற்றிலிருந்து மூன்று காவல் நிலையம் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கோப்பை விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.