சென்னை, அதனைச் சுற்றியுள்ள 11 மருத்துமனைகளில் ஆயிரத்து 420 கூடுதல் ஆக்சிஜன் இணைப்புடன்கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550 படுக்கைகளும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகளும் எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 225 படுக்கைகளும், கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் 200 படுக்கைகளும் புதியதாக அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்றுவருகின்றன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதலாக 434 படுக்கைகளும், திருச்சியில் 585, தஞ்சாவூரில் 583, கோயம்புத்தூரில் 311, மதுரையில் 225, திருநெல்வேலியில் 325, பிற மாவட்டங்களில் கூடுதலாக 7012 அறுவை சிகிச்சையுடன் உடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆகியோரும் கலந்து ஆலோசித்து இரண்டாம் நிலையை எதிர்கொள்ள மருத்துவத் துறைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைத் தீவிரமாகத் துரிதமாகச் செய்துவருவதாகத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அலை வந்த பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் ரூ.282.51 கோடி மதிப்பில் 27,806 படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் வார்டுகள், இதர சுகாதார வசதிகள் ஏற்படுத்தும் பணிகள், பொதுப்பணித் துறையால் அவசரகாலப் பணியாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.