சென்னை: மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தாயாருக்கு ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி பகுதியில், கொசு ஒழிப்பு பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சிலைகளில் கொசு மருந்து தெளிப்பு:சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்க இருக்கிறது. இதற்காக சென்னை கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளன. சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விநாயகர் சிலைகளை நெகிழியைக் கொண்டு மூடி வைத்துள்ளனர்.
சுற்றுப்புறம் மற்றும் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரில் கொசுப்புழு உருவாகும் அபாயம் உள்ளதால் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழைநீரானது விநாயகர் சிலைக்கு மேல் மூடப்பட்டுள்ள நெகிழி மீது தேங்கி, கொசுக்கள் உடனடியாக முட்டை வைத்து 40-48 மணி நேரத்தில் கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், இதை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,"சென்னையில் தற்போது கொசு ஒழிப்பு பணிக்காக 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2324 ஒப்பந்த பணியாளர்களும் என மொத்தம் 3278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறிய புகைப்பரப்பும் இயந்திரம் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் இன்று (செப்.13) டெங்கு தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டமானது நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:“தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை” - காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர்!