தமிழ்நாடு, புதுச்சேரிக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக, வரும் 6ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், மார்ச் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து 20ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 234 தொகுதிகளில், 3,585 ஆண்களும், 411 பெண்களும் , 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என 3,998 பேர் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்துமுனைப் போட்டி நிலவி வரினும் அதிமுக, திமுக கூட்டணிகளே முதன்மையானதாக பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் நடந்து வந்த பரப்புரைகள் இன்று மாலை 7 மணியளவில் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் ஆறாம் தேதி காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.