சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், பட்டாசு வெடித்து கொண்டாடியதில் சென்னையில் உள்ள சாலைகள், தெருக்களில் தேங்கிய கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள 9ஆம் மண்டல தகண மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகள் அகற்றப்பட்டதை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “இன்று (நவ.13) மாநகராட்சி சார்பில், வெடித்த பட்டாசுகளின் கழிவுகளை அகற்றுவதற்கான செயல் திட்டத்தினை வடிவமைத்து செயல்படுத்தி உள்ளோம். இதுவரை 150 - 180 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது.
திடக்கழிவு மேலாண்மை மிக சிறப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவித்ததின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். தெருக்களில் இருக்கும் பட்டாசு கழிவுகளை அகற்ற 19 ஆயிரத்து 62 தூய்மை பணியாளர்கள், பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மூன்று ஆர்.டி.சி-கள் மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் தூய்மை பணியைச் சிறப்பாக செய்து வருகின்றனர்.
திடக்கழிவில் இருந்து பட்டாசு கழிவுகளை தனியாக அகற்றி, ஒவ்வொரு மண்டலத்திலும் இருக்கும் குப்பைகளை ஒன்று சேர்த்து, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுடன் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் இட்டு, கும்மிடிப்பூண்டிக்கு இந்த கழிவுகளை அகற்றிக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளைய தினமும் பட்டாசு கழிவுகளை அகற்ற, மாநகராட்சி மற்றும் அதன் ஊழியர்களின் தேவை இருக்கும். அதற்கென தனி குழு அமைக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை கடலோர பகுதிகளில் கனமழை இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை உள்ள நிலையில் பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மழை நீர் வடிகால் குழாய்களிலோ அல்லது மற்ற குழாய்களிலோ சென்று சிக்கிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தூய்மை பணியாளர்கள், காவல்துறை, மருத்துவத்துறை ஆகிய துறைகளின் பணிகள் பாராட்டத்தக்கது. கடந்த வருடம் ஒட்டுமொத்தமாக 5 நாட்களில் 275 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டது. சென்னையில் ஒரு நாளுக்கு 6 ஆயிரத்து 150 சாதாரண திடக்கழிவுகளை மாநகராட்சி அகற்றியது. இதேப்போன்ற பண்டிகை காலங்களில், கழிவு டன்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் அகற்ற வேண்டிய கழிவுகளில் ஆபத்து அதிகமாக இருக்கும்.
மேலும், இன்று இரவுக்குள் 250 - 270 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்படும் என மாநகராட்சி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. 11 முதல் 13ஆம் தேதி வரை காவல்துறையின் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் மக்கள், விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மீறி, இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடித்தனர்.
இந்த கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் போடக்கூடாது என கூறியதற்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். அனைத்து பகுதிகளிலும், பண்டிகை காலங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே கழிவுகள் இருந்தன. ஆனால் மக்கள் அதிகம் வசிக்கும் இடமான ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் ஆகிய இடங்களில் அதிக கழிவுகள் அகற்றப்பட்டன.
மக்கள் அருமையான ஒத்துழைப்பை அளித்துள்ளனர். அவர்களாகவே பட்டாசு கழிவுகளை தனியாக அகற்றி வைத்திருந்தனர். அனைத்து பகுதிகளும் இன்னும் தீபாவளி கொண்டாடி முடிக்கவில்லை. இன்னும் சில நாட்களுக்கு இந்த கழிவுகள், பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படும். மாநகராட்சி அனைத்து கழிவுகளையும் அகற்றும் பணியில் மிக கவனமாக உள்ளது.
மக்களின் ஒத்துழைப்புக்கு மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். நாளையுடன் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மை பணி தொழிலாளர்கள் வீட்டுக்கு வந்து குப்பைகளை அகற்ற செயல்படும்போது, மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சந்தை பகுதிகளில் பிரத்தியேக விழிப்புணர்வுகளுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பெரும்பாலும் மாடியில் பட்டாசு வெடித்தவுடன் மக்கள் கழிவுகளை தனியாக அகற்றி, நன்றாக ஒத்துழைப்பு செய்துள்ளனர். தொடர்ந்து இதே ஒத்துழைப்பை சாதாரண நாட்களிலும் மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள், தங்கள் பகுதியில் பட்டாசு கழிவுகள் அகற்றப்படாமல் விடுபட்டிருந்தால், 1913 என்கிற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம். இதன் மூலம் அந்த கழிவுகள் உடனடியாக அகற்றப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தீபாவளி கொண்டாட்டம்.. சென்னையில் 148 இடங்களில் வெடி விபத்து - தீயணைப்புத்துறை தகவல்!