சென்னை:சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்த 'தி கேரளா ஸ்டோரி' (The Kerala Story) திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஏப்.26 ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அந்த டிரைலரில், கேரளாவில் உள்ள கல்லூரி விடுதியில் ஒரே அறையில் 4 பெண்கள் தங்கி படிக்கின்றனர். அதில் உள்ள ஒரு இஸ்லாமிய பெண் கேரள இந்து பெண்களை மூலச்சலவை செய்வது போன்றும், அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்றும், பல பெண்களை சிரியாவிற்கு கடத்துவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த படம் உண்மை சம்பவம் எனவும், இதுவரை 32,000 பெண்கள் இது போன்று மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதச்சார்பற்ற கேரள மாநிலைத்தில் கொண்ட கேரள மாநிலத்தில், திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருப்பதாகவும், சங்பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்த 'தி கேரள ஸ்டோரி' எனவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
மேலும் பல தரப்பினரும் இப்படம் வெளியாவதற்கு எதிர்ப்புகளையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். கேரள திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை தடை செய்வதில் எந்த பயனும் இல்லை என்றும், திரையரங்கில் தடை செய்தால், எப்படியும் அறிவித்த தேதியில் ஓடிடியில் வெளியாகும். அதனை கண்டிப்பாக மக்கள் பார்ப்பார்கள் என தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்தை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் வருகிற 5 ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் இத்திரைப்படத்தை வெளியிட்டால் பல எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என தமிழ்நாடு காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இத்திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களின் பட்டியலை எடுத்து பாதுகாப்பு அதிகரிக்கலாமா? அல்லது வேறு முடிவு எடுக்கலாமா? என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆருத்ரா, ஏ.ஆர்.டி பாணியில் 'பிராவிடன்ஸ் டிரேடிங்' மோசடி.. 2 ஆயிரம் கோடியை மீட்கக்கோரி முதலீட்டாளர்கள் கண்ணீர் மல்க புகார்!