சென்னை:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி. இவர் உளவுத் துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவர். எம்ஏ முதுகலைப் பட்டம் பெற்றவரான இவர், 1998ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். இவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தமிழ்நாடு காவல் பணியில் சேர்ந்தார்.
எஸ்பிசிஐடி (மாநில உளவுத் துறை) சிறப்பு பிரிவில் எஸ்பி, தமிழ்நாடு காவல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு, சென்னை காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் திறம்பட பணியாற்றி உள்ளார். அதேநேரம், மத்திய அரசுப் பணியான சிபிஐயில் எஸ்பியாக 5 ஆண்டுகளும், டிஐஜியாக 2 ஆண்டுகளும் பதவி வகித்தவர்.
அதன் பின்னர், தமிழ்நாடு காவல் பணிக்கு திரும்பிய ஈஸ்வர மூர்த்தி, மாநில உள்நாட்டுப் பாதுகாப்பு டிஐஜியாக 2 ஆண்டுகளும், அதன் பின்னர் ஐஜியாக பதவி உயர்ந்து, அதே பிரிவில் 3 ஆண்டுகளும் பணிபுரிந்து உளவுத் துறையில் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றார். இதனையடுத்து, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவல் விவகாரம் தலைதுாக்கி இருந்த நிலையில், அவரை மீண்டும் மாநில உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு ஐஜியாக தமிழ்நாடு அரசு நியமித்தது. உளவுத் துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த இவரை, உளவுத் துறை ஐஜியாக பணியமர்த்தப்பட்டது மூத்த காவல் அதிகாரிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.