சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஏப்ரல் 8) 2 நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக நாட்டின் விமானப் படையின் தனி விமானம் மூலம் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு மேல் புறப்பட்ட பிரதமர் மோடி, தொடர்ந்து 2.50 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஆ.ராசா மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன்,தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதலமைச்சர், மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு ‘தமிழ்நாட்டில் காந்தியின் பயண அனுபவங்கள்’ என்ற நூலை பரிசாக அளித்தார். இதனையடுத்து காரில் புறப்பட்ட பிரதமருக்கு, வழி நெடுகிலும் பாஜக தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு பிரதமர் வருகை தந்தார்.
அங்கு புதிதாக 1.36 லட்சம் சதுர மீட்டரில் ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு ‘தமிழ்நாட்டில் காந்தியின் பயண அனுபவங்கள்’ என்ற நூலை பரிசாக அளித்தார் இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விமான நிலைய புதிய முனையத்தின் மாதிரி வடிவமைப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். இவ்வாறு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையத்தின் மூலம், வருடத்துக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை சென்னை விமான நிலையம் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் புகைப்படங்கள் வெளியாகி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கு சென்னை - கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் (Vande Bharat) ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போதும், ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஏற்கனவே சென்னை முதல் மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயங்கினாலும், தமிழ்நாட்டினுள் இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும்.
மேலும் நாளை (ஏப்ரல் 9) முதல் சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை பயணிகள் உடன் தொடங்குகிறது. மேலும் இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 40 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்டதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, சென்னையில் ஐந்தடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 22 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Vande Bharat: சென்னை - கோவை வந்தே பாரத்.. டிக்கெட் விலை நிலவரம், மக்களின் கோரிக்கைகள் என்ன?