சென்னை: ஒன்றிய அரசு கல்விசார்ந்த திட்டங்களுக்கென்று அனைத்து மாநிலங்களுக்கும் சமக்ரசிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது.இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, பள்ளி கட்டடங்கள் கட்டுதல், பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சிகள் வழங்குதல், பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைப்பது உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் எனும் பெயரில், 10ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018 -2019ஆம் கல்வியாண்டில், 2 ஆயிரத்து 837 கோடியே 69 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.