தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்

By

Published : May 23, 2022, 12:55 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (மே. 23) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உழவர்களின் நலனுக்காக வேளாண் துறையினை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றியும்; வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்து உழவர்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. உழவர்களின் நலனை முன்னிலைப்படுத்தும் நம்முடைய அரசுக்கு இயற்கையும், நல்ல ஒத்துழைப்பை நல்குவதால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மே 24ஆம் தேதி அதாவது நாளையதினம், மேட்டூர் அணையினை திறந்து வைக்க இருக்கிறேன்.

தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான "மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி" என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவது இந்தத் திட்டத்தினுடைய முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த இருக்கிறோம். இந்தத் திட்டமானது ஊரக வளர்ச்சித் துறையின் மாபெரும் திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் என்பது இதனுடைய சிறப்பு!.

2021-22ஆம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் ரூபாய் 227 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை இன்றைக்கு நான் தொடங்கி வைத்திருக்கிறேன். இந்தத் திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சமே கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல் உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"தனி மரம் தோப்பாகாது" "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற மூதுரைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவர்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, வேளாண்மை – உழவர் நலத் துறையின் பல துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி பலப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால் நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும்.

கிராம வளர்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய இந்தக் காலகட்டத்தில், கிராமத்திலுள்ள அனைத்து உழவர்களையும், ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடையச் செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் அர்ப்பணிப்போடு, சிந்தையையும் செயலினையும் ஒரே நேர்கோட்டில் செலுத்தி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திடக் கேட்டுக் கொண்டு, வேளாண் பெருமக்கள், அரசுக்கும், அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும். முதலைமைச்சரின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 லட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பினை 20 லட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கத்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தல் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2021-22ஆம் ஆண்டில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை பழக்கூடைகள் மற்றும் ட்ரம், பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை, குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்திட பணி ஆணை, தென்னங்கன்றுகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மரக்கன்றுகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைப்பதற்கான பணி ஆணை, பண்ணைக் குட்டை அமைப்பதற்காக ஆணை, அக்ரி கிளினிக் அமைக்க ஆணை ஆகியவற்றை வழங்கினார்.

இதையும் படிங்க:”திமுக நம்மை ஒன்றும் தூக்கில் எல்லாம் போட முடியாது”...எஸ்.பி.வேலுமணி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details