தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு!

சென்னை: கோயில்களில் திருவிழாக்கள் நடத்துதல் நெறிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையை தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அனைத்து சார் நிலை அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை
இந்து சமய அறநிலைத்துறை

By

Published : Jul 20, 2020, 2:09 PM IST

தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலைச் சார்ந்த, பட்டியலைச் சாராத கோயில்களில் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டுமல்லாது, திருவிழாக்கள் நடைபெறுவதும் இன்றியமையாத ஒன்றாக இருந்துவருகிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்புடையதாகவும், பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாகவும் இருந்துவருகிறது. தற்போது நிலவும் கரோனா பாதிப்பையடுத்து பொதுமக்கள் நலனை முன்னிட்டு கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக இதுநாள் வரை அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், தினசரி பூஜைகள் மட்டும் தங்குதடையின்றி நடைபெற்றுவருகின்றன. தற்போது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளின்படி, கிராமப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தகுந்த இடைவெளியினைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கரோனா தாக்குதலைத் தவிர்த்திட அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், இதர பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயில்களில் நடைபெற வேண்டிய திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி கோரியும் மேற்படி உற்சவ திருவிழா நிகழ்வுகளைக் காணொலிப் பதிவுகளை யூடியூப் சேனல் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டி முன்மொழிவுகள் சார்நிலை அலுவலர்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக வழங்கப்படுகின்றன.

1. கோயில்களில் பழக்கவழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி பெற வேண்டியதில்லை.

2. திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள்படி மாறுதல் ஏதுமின்றி கோயில் வளாகத்திற்குள் நடைபெற வேண்டும்.

3. திருவிழாக்கள் கோயில்களில் சொற்ப அளவிலான பணியாளர்களைக் கொண்டு, முகக்கவசம் அணிந்தும் 6 அடி இடைவெளி கடைப்பிடித்தும் நடைபெற வேண்டும்.

4. இவ்விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை. கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும்.

5. திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டியிருப்பின், அந்த னுமதியையும் பெற்று திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

6. இவ்விழாக்களைப் பக்தர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து காணும் வகையில் வலைதளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு இந்து சமய அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details