சென்னை:, சாலைப்பாதுகாப்பு மேம்பாடு மற்றும் விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்களுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை செயலகத்தில்ஆய்வு நடத்தினார்.
போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு
தமிழ்நாட்டில் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நடக்கும் இடங்கள் அதிகம் உள்ளது; அவற்றை கரும்புள்ளிகள் என்று கூறுவர். 500 மீட்டர் நீள இடைவெளியில் மூன்று ஆண்டுகளில் 5 பெரிய சாலை விபத்துகள் அல்லது 10 உயிரிழப்புகள் நடந்த இடத்தையே கரும்புள்ளியாக போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு அடையாளம் காண்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 748 கரும்புள்ளிகள் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு ( TRW ) மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேலும் விபத்துகள் நடக்காமல் இருக்கிறதா என கவனிக்க அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் பொறியாளர்களுக்குப் பயிற்சி
டெல்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் சாலை பாதுகாப்பு பணிகளுக்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. அதைப்போல, தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கும் டெல்லியிலுள்ள அலுவலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை சாலை பாதுகாப்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் முக்கிய சந்திப்புகள் மற்றும் வளைவுகளில் சோலார் விளக்குகளை பொருத்தி விபத்துகளைத் தவிர்த்து சாலை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சாலை மேம்பாட்டு பணிகள்
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் திரு . தீரஜ் குமார், முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆர்.கோதண்டராமன், தலைமைப் பொறியாளர்கள் ஆர்.சந்திரசேகர், என்.பாலமுருகன், கீதா, எம்.கே.செல்வன், விஜயா, சாந்தி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் டி.இளங்கோ, டி.தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'நவம்பர் 9 ஆம் தேதி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்' - காவிரி விவசாயிகள் சங்கம்