சென்னை: மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறையால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் மேற்கொள்வதை மாணவர்கள் கைகொள்வதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
நூலகப் பாடவேளை உறுதி
ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனி அறை ஒதுக்கீடு செய்து தேவையான மேஜை, அலமாரி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் புத்தகம் வழங்கல் பதிவேட்டைத் தயார் செய்து நூலகத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இடப் பற்றாக்குறையுள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒரு வகுப்பறையை பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் நூலக நேரம் தவிர்த்து, மாணவர்கள் தமிழ், ஆங்கில நாளிதழ்கள் வாசிப்பதற்காக நூலகம் திறக்கப்பட வேண்டும்.