தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்படும் காவல் துறை: ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தல்!

சென்னை: கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், உரிய கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கடைபிடித்து நோய்தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்
ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்

By

Published : Apr 28, 2021, 9:50 PM IST

சென்னையில் கரோனா தொற்றால் காவல் துறையினர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 324 காவல் துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 14 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மக்களோடு மக்களாக நின்று முன்களப் பணியாளர்களாக செயல்படும் காவல் துறையினரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு, சென்னை காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக களப்பணியாற்றும் காவல் துறையினர் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை சென்னை காவல் துறை வெளியிட்டுள்ளது. மேலும், இதனை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், “50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணை நோய் உள்ள காவல் துறையினருக்குப் பொதுமக்களுடன் அதிக தொடர்பு இல்லாத வகையில் எளிமையான பணியை வழங்க வேண்டும்.

மேலும், காவல் துறையினர் அனைவரும் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமி நாசினி கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

அதேபோல, குற்றவாளிகளை கைது செய்யும் கட்டாயம் ஏற்படும்போது மட்டுமே, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி கைது செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட காவல் துறையினர் மட்டும் உரிய பாதுகாப்புடன் குற்றவாளியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

விபத்து, இறப்பு, தற்கொலை போன்ற வழக்குகளில் மருத்துவமனைகளுக்கு காவல் துறையினர் செல்ல நேரும் பட்சத்தில் அவர்கள் முறையாக பி.பி.இ கிட் அணிந்து செல்ல வேண்டும்.

வழிகாட்டுதல்களை முறையாக காவலர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை காவல் ஆய்வாளர்கள் கண்காணித்து உறுதி செய்யவேண்டும். பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் தொடர்பான விசாரணைகள் உள்ளிட்டவை திறந்த வெளியில் நடத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் ” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுடனான நெருக்கத்தை குறைக்கும் பொருட்டு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே வாகனத் தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்படி வாகன தணிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் முகக்கவசம், ஷீல்ட், கையுறை ஆகியவற்றை அணிந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உயர் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்கள் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு முறையாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் உணவுகளை உட்கொள்கிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும், அனைத்து காவல் துறையினரும் மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்துவர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் கரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகும் பட்சத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் சென்னை காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, “பாதிக்கப்பட்ட காவலரோ அவரது குடும்பத்தினரோ கரோனா கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவிக்கு 044-23452437 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நிலமையை பதிவு செய்து வேண்டிய உதவிகளை கேட்டுப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பாதிக்கப்பட்ட காவலரை பரிசோதனை செய்து, அண்ணா பல்கலைகழகத்தில் காவல்துறையினருக்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள கோவிட் கேர் செண்டருக்கு அவரை அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அனைத்தையும் காவல் துறையினர் அனைவரும் தொடர்ந்து பின்பற்றி கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து தங்களையும் குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: Exclusive: கரோனா தொற்றாளர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அவலம்

ABOUT THE AUTHOR

...view details