Child Marriage: தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அறிவாெளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைத் திருமணம் குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 3,326 இளம் வயதில் கருத்தரிப்பு கடந்த ஜூலை 2021ஆம் ஆண்டுமுதல் அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இளம் வயது கருத்தரிப்பு குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 95 கருத்தரிப்பும், செப்டம்பர் மாதம் 95 கருத்தரிப்பும் நடந்துள்ளது. ஆனால் 2021 ஆம் ஆண்டு கருத்தரிப்பு 76 லிருந்து 38 எனக் குறைந்துள்ளது. குழந்தைத் திருமணம் தடுப்புப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021 அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் பெண் குழந்தைத் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதில் ஜனவரி 2021 முதல் இன்றுவரை 61 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடப்பதைத் தடுக்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். கல்வித் துறை மூலமாகக் குழந்தைத் திருமணம் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் தலைமையாசிரியர் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சைல்டு லைன் புகார்
மேலும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவியர் தொடர்ந்து 2 அல்லது 3 நாள்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களைக் கண்காணித்து குழந்தைத் திருமணம் எனில் 1098 (சைல்டுலைன்) மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் தொடர்ந்து இடைநின்ற குழந்தைகளின் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர் (VAO), கிராம உதவியாளர் ஆகியோர் திருமணத்தினைக் கண்காணித்து குழந்தைத் திருமணம் எனில் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பெற்றோர் மீது வழக்குப்பதிவு
குழந்தைத் திருமணம் செய்ய முயற்சி செய்யும் பெற்றோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். குழந்தைத் திருமணம் நடைபெறுவதாகத் தகவல் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து காவல் துறையினர் செயல்பட வேண்டும்.