சென்னை:தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 50ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வுகளில் மொழித்தேர்வை எழுதாமல் இருந்த மாணவர்கள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய தேர்வுகளை எழுதாமல் மாணவர்கள் விடுமுறை எடுத்த விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
எஞ்சிய பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் விடுமுறை எடுக்காமல் எழுதக்கூடிய வகையில் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மொழித் தேர்வுகளை எழுதாமல் விட்டுள்ள மாணவர்களுக்கு வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறக்கூடிய துணைத் தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை எனத் தெரிவித்த அவர் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்தவும் அரசின் பரிசீலனை இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதுவதன் அவசியத்தை அவர்களுக்கு பெற்றோர்களிடம் எடுத்துரைக்க இருப்பதாகவும், மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ''நான் முதல்வன்'' (https://www.naanmudhalvan.tn.gov.in/) உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.