மாநில மனித உரிமை ஆணையத்தில், நிலக்கோட்டை இ.பி.காலனியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரோகினி தாக்கல் செய்த மனுவில், தேனி அல்லிநகரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ள எனது மகள், குடும்ப பிரச்னையில் தாக்கப்பட்டது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக, நான் 2018ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அல்லிநகரம் காவல் நிலையம் சென்றதாகவும், அங்கிருந்த ஆய்வாளர் சண்முகலட்சுமி, என்னை தாக்கி காவல் நிலையத்தில் இருந்து வெளியே தள்ளியதுடன், என் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகவும் கூறியுள்ளார்.
ஆய்வாளர் சண்முகலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர் தாக்கல் செய்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், கைது நடவடிக்கையின் போது உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல், ஆய்வாளர் சண்முகலட்சுமி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.