தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்' - பாமக - சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், தாமதமானால் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி அரசியல் முடிவை எடுக்கும் என, பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

pmk
pmk

By

Published : Jan 9, 2021, 4:54 PM IST

பாமகவின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம், இன்று (ஜன. 09) இணைய வழியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சாதிகள், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவில் ஏழு சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 47 சாதிகள், சீர்மரபினர் பிரிவில் 68 சாதிகள் உள்ளன.

கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம், கடந்த 1980ஆம் ஆண்டில் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களின் பயனாக, கடந்த 1989ஆம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன், கடந்த 1951ஆம் ஆண்டிலிருந்து 39 ஆண்டுகளாக மேற்கண்ட 263 சாதிகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற ஒரே பிரிவில்தான் இருந்தன.

263 சாதிகளும் ஒரே சமூக, கல்வி நிலையில்தான் இருப்பார்கள் என்று நினைத்ததே சமூக நீதிக்குச் செய்யப்பட்ட துரோகமாகும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த தீர்மானத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில் வன்னியர்களுக்கும், பிற சாதிகளுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பதை வெளியிடுவதற்குக்கூட தமிழ்நாடு அரசு மறுத்துவருகிறது.

மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று (ஜன. 08) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில், வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி, புதுவை மாநில அமைப்பாளர் முனைவர் கோ. தன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு பேச்சு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை வன்னியர்களின் சமூகநீதிக்கான இக்கட்சியின் நியாயமான, எளிய கோரிக்கையைப் பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்று மாநில அரசை நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு செய்ய தாமதமானால் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக்கட்ட முடிவை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details