தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்பாக்கி குண்டு வைத்திருந்த அமெரிக்க மாணவர்! சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை

சென்னையில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்ல வந்த அமெரிக்காவில் படிக்கும் கல்லூரி மாணவர் சூட்கேஸில் இருந்த துப்பாக்கி குண்டை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 6:01 PM IST

சென்னை:சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவரின் சூட்கேஸில் இருந்த துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அம்மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அம்மாணவரையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக் குண்டையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

சென்னை சாலிகிராமம் அருகே சின்மயா நகரில் வசிப்பவர் கிஷோர். இவர் மனைவி, மகனுடன் அமெரிக்க குடியுரிமை பெற்று, அமெரிக்காவில் வசிக்கின்றனர். கிஷோரின் மகன் கவுரி(20), அமெரிக்காவில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் கிஷோர் குடும்பத்துடன், சென்னை சின்மயா நகரில் வசிக்கும் தனது தாயைப் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

அதன் பின்பு நேற்று இரவு கிஷோர், மனைவி, மகன், தாய் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். இரவு 11:30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இவர்கள் பயணிக்க திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், கிஷோர் குடும்பத்தினர் உடைமைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது கிஷோரின் மகன் கவுரி சூட்கேசில், அபாயகரமான பொருள் இருப்பதற்கான சைரன் ஒலி எழுந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் கவுரியின் சூட்கேஸை தனியே எடுத்து வைத்து, பாதுகாப்பாக திறந்து பார்த்து சோதனையிட்டனர். சூட்கேசில் துப்பாக்கி குண்டு ஒன்று இருந்தது. அந்த குண்டு வெடிக்கும் நிலையில் லைவ் ஆக இருந்தது. இதையடுத்து துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்ததோடு இதுகுறித்து கவுரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது கவுரி, தான் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி எடுத்து வருவதாகவும், அதற்காக அமெரிக்காவில் துப்பாக்கி லைசென்ஸ் எடுத்து துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதில் பயன்படுத்த வைத்திருந்த குண்டுகளில் ஒன்று, தவறுதலாக இந்த சூட்கேஸில் இருந்ததாக கூறினார். மேலும் 10 நாட்களுக்கு முன்பதாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்தபோதும், இதே சூட்கேஸ்ஸை தான் எடுத்து வந்ததாகவும் ஆனால், அப்போது யாரும் இதை கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் கவுரியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். இதையடுத்து கிஷோர் தனது குடும்பத்தினர் அனைவரின் சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்து விட்டார். அதன் பின்பு கவுரியையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக் குண்டையும் பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் இன்று (ஆக.19) அதிகாலை ஒப்படைத்தனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவில் படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவரின் சூட்கேசுக்குள் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீலங்கன் யாழ் உணவின் சுவையை ருசிக்க வேண்டுமா? பிரத்யேகமாக திருச்சிக்கு வந்துள்ள இலங்கை உணவுகள்!

ABOUT THE AUTHOR

...view details