சென்னை: செங்குன்றத்தை அடுத்த அலாமதி பகுதியைச் சேர்ந்தவர், ராஜசேகர் என்ற அப்பு (30). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சொத்து தகராறு வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜசேகர் என்ற அப்புவை கொடுங்கையூர் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கியதால், அவரை காவல் துறையினர் தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், ராஜசேகரை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்று விட்டதாகவும் தொடர்புடைய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த ராஜசேகர் தொடையில் காயம் இருந்ததாக தகவல் வெளியானது. விசாரணைக்கைதி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்திய மூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் உள்பட ஐந்து காவலர்களிடமும் குற்றவியல் நீதிபதி லட்சுமி விசாரணை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து உயிரிழந்த ராஜசேகரன் என்பவரின் உறவினர்களிடம், நீதிபதி விசாரணை மேற்கொண்டார். பின், நீதிபதி லட்சுமி, ராஜசேகர் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க:விசாரணைக் கைதி மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்