சென்னை:களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரதீப் என்பவர் தனது மனைவி வனிதாவை பிரசவத்திற்காக கடந்த 22ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தபோதும், மூன்று நாள்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைப் பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், வனிதா அங்கேயே தங்கி சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில், மணிமாலா என்ற செவிலி செலுத்திய தவறான ஊசியால், வனிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழக்க நேரிட்டது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று முன்தினம் (ஜூலை 27) உயிரிழந்தார்.
இறப்பிற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றஞ்சாட்டி, உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, செவிலி மணிமாலாவை பணியிடைநீக்கம் செய்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இது தொடர்பாக இரு வாரங்களில் அறிக்கை அளிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.