சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (மார்ச் 31) அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படக் கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகைப்படுத்துதல், தர நிலைப்படுத்துதல் மற்றும் முன்னுரிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் (செலவினம்) வி. அருண்ராய், மற்றும் வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் ஆசிய பசிஃபிக் பகுதியின் பொது இயக்குநர் ஜென்னிபேட்ஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் அதிகளவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான மாற்று முறை நிதி ஆதாரமாக எதிர்நோக்கியுள்ளன. இதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேலும் அணுகக்கூடியவை ஆகவும், உள்ளார்ந்ததாகவும் மற்றும் சமநிலையுடையதாக மாறும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு, இங்கிலாந்து அரசின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் ஆய்வு மற்றும் சான்று இயக்குநகரத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் , இந்தியாவில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டின் உள்ளார்ந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டதாகும்.
இத்திட்டம் தமிழ்நாடு அரசின் தேவைக்கிணங்க உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கான ஒரு வரைமுறையை உருவாக்கவும், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய முறையால் செயல்படுத்துவதற்கும் பொருத்தமான திட்டங்களுக்கான உத்தேச பட்டியலை தயாரித்து வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆட்சியில் முறையாக பயன்படுத்தப்படவில்லை' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்