தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஆதார நிதி பெற விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கான ஆரம்பகட்ட ஆதார நிதியைப் பெறுவதற்கு விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கச் செயலகம் அறிவித்துள்ளது.

By

Published : Feb 28, 2022, 7:00 AM IST

Initial Resource Fund  Tamil Nadu Innovation Companies  Initial Resource Fund for Tamil Nadu Innovation Companies  புத்தாக்க நிறுவனங்களுக்கான ஆதார நிதி  தமிழ்நாடு புத்தாக்க நிறுவனங்கள்  தமிழ்நாடு புத்தாக்க நிறுவனங்களுக்கான ஆரம்பக்கட்ட ஆதார நிதி
புத்தாக்க நிறுவனங்களுக்கான ஆதார நிதி

சென்னை:தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) செறிவார்ந்த முன்னெடுப்புகளில் ஒன்று தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதி வழங்கும் திட்டம் (TANSEED) ஆகும்.

இது தமிழ்நாட்டில், உலகளாவிய அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்றக் களமாகவும் இருக்க வேண்டும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இயங்கிவருகிறது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கச் செயலகம் (TANSIM) இந்நோக்கத்திற்குப் பயனளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களைத் தகுதிவாய்ந்த நடுவர் குழு வழியே தேர்வுசெய்து, ஆரம்ப கட்ட ஆதார நிதியாக (Tamilnadu startup seed grant fund) 10 லட்சம் ரூபாய் வழங்குகிறது.

ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தாமரைக்குளம் என்னும் மீனவ கிராமத்தினைச் சேர்ந்தவர் மோகன். இவர் Ippo Pay என்ற பெயரில் நிதிசார் தொழில்நுட்பப் புத்தொழில் (FINTECH) நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார். இவரது Ippo Pay நிறுவனம் இந்த ஆண்டு 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையினை முதலீடாகப் பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ளது.

ஏற்கனவே புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதி வழங்கும் திட்டத்தின் வாயிலாக 10 லட்சம் ரூபாயினை ஆதார மானிய நிதியாகப் பெற்ற நிறுவனங்களில் மோகனின் Ippo Pay நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக, மூன்றாவது முறை புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதார மானிய நிதி வழங்குதலுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனம் மகிழ்வுடன் வெளியிடுகின்றது. கடந்த சுற்றில் முறையாக 19 புத்தொழில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் வீதம் உதவித்தொகை முதலமைச்சரால் 2021 டிசம்பர் 23 அன்று வழங்கப்பட்டது.

இந்த நிதி தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் தம்மை நிலைப்படுத்திக்கொள்ளவும், வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். இது சிவராஜா ராமநாதன் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பொறுப்பேற்ற பிறகு மேற்கொண்ட முதல் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும்.

புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதி வழங்கும் திட்டம் 3.0-விற்கான விண்ணப்பங்கள், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கச் செயலகத்தின் இணையதளமான www.startuptn.in-இல் உள்ளன. தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள அதில் பதிவுசெய்ய விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 2022 மார்ச் 11 ஆகும். வழிகாட்டுதல்கள், தேர்வு செயல்முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள www.startuptn.in இணையதளத்தினைப் பார்வையிடவும். ஏதேனும் கேள்விகள் இருப்பின் support@startup.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரஷ்ய ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டத் தடை - கூகுள் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details