சென்னை:சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன வெளியிட்டுள்ள 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு:
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காகப் போராடியவர்கள் குடியரசு முன்னாள்தலைவர், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரைப் போற்றும்வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவச்சிலைகள் நிறுவப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்திலும், தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும், ஏபிஜே அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என உருவச்சிலை அமைக்கப்படும்.
மேலும், ரவீந்திரநாத் தாகூர், நாவலர் நெடுஞ்செழியன், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, மு. வரதராசனார் உள்ளிட்டோருக்குச் சிலைகள் வைக்கப்படும். தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கூட்ட அரங்கம் அமைக்க பழுதடைந்த கட்டடங்கள் மின்கலங்கள் மற்றும் சீரமைப்பு உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
இணைய வழியாக விளம்பரம்
அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசின் செயல்பாடுகள், திட்டங்களைப் பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும். அரசின் விளம்பரங்களுக்கு மின் சுவர்கள் உருவாக்கப்படும்.
அரசு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை, வண்ணப் புகைப்பட நகல் சுருள்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கவும், தற்போது எடுக்கப்படும் புகைப்படங்களை ஆவணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.