சென்னை: மாநில செய்தி நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சென்னை, திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார். அப்போது, "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னை, திருச்சிராப்பள்ளி ஆகிய இரண்டு மண்டலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செய்தித் துறை அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நல்ல பல திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்களை எளிதில் மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை இத்துறை சிறப்பாக செய்து வருகிறது. மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்கள் சந்திப்புகளை ஏற்பாடு செய்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் தற்போது இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள சமூக ஊடகங்களில் செய்திகள் இடம் பெற ஆவண செய்ய வேண்டும்.
மக்களின் அன்றாட பிரச்சனைகள் மற்றும் தேவைகளை உடனுக்குடன் அறிந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அலுவலர்களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில், பொதுமக்களுக்கு அதிக அளவு பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கள் பணிகளை முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.