சென்னை:சென்னை டைடல் பார்க்கில், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற 'நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு' எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு நடைபெற்றது.
இக்கொள்கை மூலம், மாநிலத்தில் உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகுப்புச்சலுகை அளிக்கப்பட்டு, இத்துறையின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, இக்கொள்கை பெருமளவில் ஆதரவு வழங்கிடும்.
இக்கொள்கையின் மூலம் 10 ஆண்டு காலகட்டத்திற்குள் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் ரூ.1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ரூ.251.54 கோடி செலவில் டைடல் பார்க்கில் அமைத்துள்ள “TANSAM”, மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, மின் வாகனங்கள் (EV), தொழில் இயந்திரங்கள், கடல்சார் தொழில்நுட்பம் பசுமை சக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல், உயிரியல் தொழில் நுட்பத்துறை, தொழிற்சாலைகளின் தானியக்கம் சார்ந்த திட்டங்களுக்கு, ரோபாடிக்ஸ், உற்பத்திப்பொருட்களை இணையத்துடன் இணைக்கும் வளையமைப்பு , ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, மிக்ஸ்டு ரியாலிட்டி, சேர்க்கை உற்பத்தி, டிஜிட்டல் டிவின்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கிடும் வகையில் TANSAM திறன்மிகு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகு திறன்மிகு மையம் நம் நாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3D அச்சிடுதல் தொழில் நுட்பத்தில், உலகத்தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்தியினை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
GE ஏவியேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உபயோகப்படுத்தி, சேர்க்கை உற்பத்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை செம்மைப்படுத்திக் கொள்ள TAMCOE உதவும். மேலும், குறு, சிறு நிறுவனங்கள் புத்தொழில்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு சாத்தியக்கூறு ஆய்வுகள், முன்மாதிரி சேர்க்கை பகுதிகள் போன்ற துறைகளில் ஆலோசனை சேவைகளும் வழங்கும்.
அறிவுசார் சொத்துரிமை மூலம் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் பயன்பாடுகளுக்கான உலோக 3D அச்சிடுதல், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகனத் துறைகளில் அதிநவீன உற்பத்தித் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அத்துறைகளுக்கு ஒரு தனித்துவம் ஏற்படுத்தித் தருவது, TAMCOE-ன் முக்கிய நோக்கமாகும்.