சென்னை:தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், தேசிய அளவிலான தீவிர தடுப்பூசி முகாம் இந்திரதனுஷ் என்ற பெயரில் ஆகஸ்ட் 7 ந் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையும், செப்டம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரையும், அக்டோபர் 9ம்தேதி தொடங்கி 15ம் தேதி வரை என 3 கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு மருத்துவத்துறை முதலிடம் வகித்து வருகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. கரோனா காலத்தில் ஒன்றிய அரசு தடுப்பூசியை அரசிற்கு 75 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதமும் வழங்கியது. ஆனால் அரசில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டதால் அதிகளவில் மக்கள் அரசு மருத்துவமனைகளில் வந்து செலுத்திக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் பெற்று செலுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இருந்த தடுப்பூசியும் பொது மக்களுக்கு போடப்பட்டது. தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதில் குறைபாடுகள் உள்ளன. எனவே தான் தேசிய அளவில் தீவிர தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.