சென்னை:செய்திகளைப் படித்து அறிந்து கொள்வதைவிட புகைப்படத்தை பார்த்தாலே பல செய்திகளை அறிந்துகொள்ளக்கூடிய நிலை இன்றைக்கு இருக்கிறது. ஆகவேதான், புகைப்படத்தை பார்த்தவுடனே பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.10) சென்னை, லலித்கலா அகடாமியில் (Lalit Kala Academy) தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், 'செய்திகளை படித்து அறிந்து கொள்வதைவிட, புகைப்படத்தை பார்த்தாலே பல செய்திகளை அறிந்துகொள்ளக்கூடிய நிலை இன்றைக்கு இருக்கிறது. ஆகவேதான், புகைப்படத்தை பார்த்தவுடனே பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.
'பேனா'வை உங்களுக்கு தெரியும்:"இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேனாவிற்கு எப்படி சக்தி இருக்கிறதோ? அதுமாதிரி புகைப்படத்திற்கும் சக்தி இருக்கிறது. நான் சொல்கிற பேனா, எந்தப் பேனா என்று உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலையில், பேனாவிற்கும் புகைப்படத்திற்கும் பல தொடர்புகள் உண்டு, பல சக்திகள் உண்டு. அந்த வகையில் ஒரு சக்தி வாய்ந்த நிலையிலேதான் அந்தப் புகைப்படங்களையெல்லாம் பார்க்கிறபோது அது உயிரோட்டமாகவே இருக்கிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ’’நடந்த சம்பவங்களை அப்படியே எடுத்து வெளியிடக்கூடிய நிலையில் அதைப் பார்த்தவுடனே, என்ன நடந்திருக்கிறது? என்ன செய்தி அது? என்ன சம்பவம் எது? எப்படிப்பட்ட நிலையில் நடந்திருக்கிறது? என்பதை மிகவும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அந்த புகைப்படங்களை எடுப்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்று’’ எனக் கூறினார்.
சொல்லாததை செய்யும் ஆட்சி: "அதே நேரத்தில் இந்த சங்கத்தின் சார்பில், வீட்டுமனை குறித்து ஒரு கோரிக்கையை என்னிடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கை எல்லா நிலையிலும், முடிவடைந்து வெளியிடப்படக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே, நீங்கள் உடனடியாக முடித்து தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, உறுதியாக இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்தார்.
பரிசீலித்து நடவடிக்கை: ’’ஏற்கனவே, திமுக ஆட்சி வந்த பிறகுதான் பத்திரிகையாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நிச்சயமாக உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும், அவற்றை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கையை நிச்சயமாக நாங்கள் எடுப்போம் என்ற அந்த நம்பிக்கையை உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கட்டுப்பாடாக இருந்திருக்க வேண்டும்' - விஜய் சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் அட்வைஸ்!