சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்தானதையடுத்து, சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். சென்னை - திருச்சி இடையே 4 விமானங்களும், திருச்சி- சென்னை இடையே 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இன்று (நவ. 20) ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பயணிகளின் போக்குவரத்து சிரமத்தை முன்வைத்து, ரத்தான விமானங்களுக்கு ஈடுகட்டும் வகையில் இன்று (நவ.20) மாலை 3:30 மணியளவில் சென்னை- திருச்சிக்கும், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணியளவில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து தினமும் காலை 6:20, 9:25மணிக்கும், பகல் 12 :30 மணிக்கும், மாலை 6:40 மணி ஆகிய நேரங்களில் 4 விமானங்களும், அதைப்போல் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8:55 மணிக்கும், பகல் 12 மணிக்கும், மாலை 3 மணிக்கும் மற்றும் இரவு 9 மணி ஆகிய நேரங்களில் 4 விமானங்கள் வழக்கமாக இயங்கிவருகிறது.
இவ்வாறு ஒரு நாளைக்கு புறப்பாடு விமானங்கள் 4, வருகை விமானங்கள் 4 என மொத்தம் 8 விமானங்களை சென்னை- திருச்சி- சென்னை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தினமும் இயக்கி வந்த நிலையில், இன்று(நவ.20) இந்த 8 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்படுவதாக நேற்று(நவ.19) இரவு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்தது. அதோடு பயணிகளுக்கும் குறுஞ்செய்தி தகவல் தெரிவிக்கப்பட்டது.