சென்னை:சவுதி அரேபியாவில் உள்ள தமாமிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் பயணம் செய்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வைத்தியநாதன் (37) என்ற பயணி, அடிக்கடி தனது இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் கழிவறைக்கு சென்று வந்துள்ளார்.
அவர் ஒவ்வொரு முறை கழிவறையை பயன்படுத்த சென்று வரும்போதும் அவரிடம் சிகரெட் புகையிலை நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சக பயணிகள் அவரிடம் விமானத்திற்குள் புகை பிடிக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் நீங்கள் விதியை மீறி தொடர்ந்து கழிவறைக்கு சென்று புகை பிடித்து வருவது சரியா? என்று கேட்டனர்.
அதற்கு அந்தப் பயணி நான் செயின் ஸ்மோக்கர். என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது. எனவே நான் என்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருக்கும் சிகரெட் மற்றும் லைட்டரை விமானத்தின் கழிவறையில் தான் உபயோகப்படுத்துகிறேன். அதில் உங்களுக்கு என்ன சிரமம்? என்று கேட்டுள்ளார். ஆனால் சக பயணிகள் சிகரெட் லைட்டரை விமானத்திற்குள் உபயோகப்படுத்துவது விமானத்தில் பயணிக்கும் 164 பயணிகளுக்கும் பேராபத்தை உருவாக்கும் என்று எச்சரித்தனர்.
இதனால் சக பயணிகளுக்கும், வைத்தியநாதனுக்கும் இடையே விமானத்திற்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விமான பணிப்பெண்கள் பயணிகளிடம் வந்து விசாரித்தனர். அப்போது சக பயணிகள் இந்தப் பயணி தொடர்ச்சியாக எழுந்து சென்று புகை பிடித்து வருவதாகக் கூறினர். இதையடுத்து விமான பணிப்பெண்கள் விமான கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர்.