இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில், “கரோனா என்னும் பெருந்தொற்று நோயால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நமது தமிழ்நாடு அதில் சிக்கித் தவிப்பதை எண்ணி கனத்த இதயத்தோடு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கரோனா சிகிச்சைப் பணியில் இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தியவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள். விளைவு, பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 30 சுகாதாரப் பணியாளர்கள் இதுவரை கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருகிறார்கள்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சொந்த உறவுகளே நெருங்கத் தயங்கும் நேரத்தில், அவர்களை நெருங்கி சிகிச்சையளிக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மருத்துவர்கள். அவர்களில் ஒருவர் மரணமடைந்தபோது, அவரது உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய மக்கள் புரிதலின்றி எதிர்ப்பு தெரிவித்த உடனே, அரசு எச்சரிக்கை அடைந்து அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யத் தவறியதால், அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்களின் இறுதி அடக்கமும் வேதனை தரும் வகையில் நடந்தேறியதை நாம் கண்டோம்.
குறிப்பாக, இந்த அரசின் உச்சபட்ச அலட்சியத்தால் மருத்துவர் சைமனின் உடல் அடக்கத்தின்போது நடந்த நிகழ்வுகள் அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி, அதன் காரணமாக இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அளவுக்குப் போனதையும் நாம் கண்டோம்.
மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் இல்லை என்ற கூக்குரல் கண்டுகொள்ளப்படாத நிலையில், அவர்கள் அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அரசியல் நடத்தாதீர்கள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்து சொல்கிறார்கள்.