தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கும், இந்த ஆண்டு புதிய பாடப் புத்தகங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 210ஆவது பக்கத்தில் மொழிகள் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளன. அதில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழாம் வகுப்பு புத்தகத்தில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என குறிப்பிடப்பட்டுள்ளது இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி, ஆங்கிலம் இரண்டும் உள்ளது. ஆனால் ஆங்கிலத்தை விடுத்து இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என குறிப்பிட்டிருப்பது இளைய தலைமுறையினர்களிடம் தவறான தகவல்களைக் கொண்டு சேர்க்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 22 மொழிகள் உள்ளன. இந்தியாவிற்கு தேசிய மொழி, ஆட்சி மொழி என தனி மொழி கிடையாது என குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள், உடனடியாக பள்ளிக்கல்வித்துறை உரிய திருத்தங்களை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி - மீண்டும் சர்ச்சை! ஏற்கனவே 12ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை காவி வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் தேசிய கீதம் எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டுள்ள நிலையில், இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என குறிப்பிடப்பட்டிருப்பது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.