தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அமெரிக்காவுன் தான் போட்டியே" - 9 ஆண்டு மோடி ஆட்சி குறித்து அண்ணாமலை கருத்து - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

உலகளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறியுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai
அண்ணாமலை

By

Published : May 29, 2023, 5:42 PM IST

சென்னை:ஆழ்வார்பேட்டையில் தனியார் நட்சத்திர விடுதியில் மாபெரும் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி சாதனை குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.

9 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்ததை போல், 10வது ஆண்டிலும், இனி வரும் காலங்களிலும் கொடுப்போம். 30 ஆண்டுகளாக இந்தியா முன்னேறாமல் இருந்த நிலையில், 2014-க்கு பின் முன்னேறி இருக்கிறது. கரோனாவை சரியாக கையாண்ட நாடு இந்தியா தான். 220 கோடி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு உணவு கொடுத்து ஊக்கம் அளித்துள்ளோம். பிரதமர் மோடி 2014-க்கு பிறகு இன்று 3.50 கோடி மக்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். 1947ம் ஆண்டு முதல் 2014 வரை ஆறரை கோடி கழிப்பறை தான் கட்டி இருந்தார்கள். ஆனால் அதன்பின் வந்த மோடி ஆட்சியில், 11 கோடியே 70 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கு 1 ரூபாய்க்கு சானிட்டரி நேப்கின் கொடுக்கப்பட்டுள்ளது. கரோனா இல்லாத நாடாக நம் நாட்டை மாற்றி இருக்கிறோம். இதுவே பெரிய சாதனை.

12 கோடி வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் விநியோகிக்கபடுகிறது. தமிழகத்தில் உள்ள 63% வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சமூக நீதி உள்ள மனிதர் மோடி தான் என்று சொல்லலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்க நண்பனாக மோடி உள்ளார். பாஜக செயல்பாடு வேகமாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். ஆனால் அதன் டிக்கெட் விலையை அவர் பதிவு செய்யவில்லை. அனைத்து தரப்பு மக்களும் புல்லட் ரயிலை பயன்படுத்த முடியாது அதன் கட்டணம் அதிகம். ஆனால் வந்தே பாரத் ரயில் அப்படி இல்லை. ரயில் நிலையங்களை, விமான நிலையம் தரத்திற்கு உயர்த்தி உள்ளோம். 7 ஐஐடி, 713 பல்கலைக்கழகங்களை உருவாக்கி இருக்கிறோம். 9 ஆண்டுகளில் 700 புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று திமுக அரசின் செயல்பட்டால் 3 மருத்துவக் கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வருத்தம் அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு 11 மருத்துவக்கல்லூரியை கொடுத்துள்ளார். ஆனால் தமிழக அரசு அதனை சரியாக பயன்படுத்தவில்லை, பராமரிக்கலில்லை. அது எங்களுக்கு வருத்தம். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1 கோடி இந்தியர்கள் காஷ்மீருக்கு பயணம் செய்துள்ளார்கள். அந்த அளவிற்கு காஷ்மீரின் கட்டமைப்பு ஆட்சி சிறப்பாக உள்ளது. பனிக் காலத்தில் காஷ்மீரில் மக்கள் வெளி வர முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. மணாலி முதல் லே வரை பிரதமரின் ஆட்சியில் சிறப்பாக உள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பண மதிப்பிழப்பை விமர்சித்தார். அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஆன்லைன் பணபரிவர்த்தனையை அமெரிக்கா கற்று கொள்ளும் அளவிற்கு இந்தியாவை வளர்த்துள்ளோம். உலகத்தில் நடக்கக்கூடிய ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவில் தான் 40% உள்ளது. அமெரிக்காவில் 21% தான். இந்தியா பொருளாதாரத்தில் நன்றாகவே முன்னேறி இருக்கிறது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் உள்ளன. 40 ஆண்டுகளுக்கு பிறகு, அவை பெரு நிறுவனங்களாக மாறும். காசி தமிழ்ச் சங்கமத்துக்கு பிறகு காசி சிறப்பாக மாறி உள்ளது. உலகத்தின் பாதுகாப்பான நாடு இந்தியா தான். அந்த அளவிற்கு இந்தியாவை கொண்டு வந்துள்ளோம். 2 கோடியே 90 லட்சம் மக்களை கரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து பாதுகாப்பாக விமானம் மூலம் தாய்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்" என கூறினார்.

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை, தாங்கள் குற்றச்சாட்டு கூறியவுடன் , குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதை போல் உள்ளது. அவ்வாறு செய்தால் அரசின் சட்டத்திட்டம் கேள்விக்குள்ளாகும். புகாரளிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு. ஆனால் விசாரணை நடத்தித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 99 சதவீத வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

திமுக அரசு மீது நான் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளேன். ஆனால் நான் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதால், அவர்கள் மீது புகார் கூறியவுடனேயே கைது செய்ய வேண்டும் என்றால் அது சரியாக இருக்காது. மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டை யாரும் மறுக்கவில்லை. அதற்ககு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதில் முதலாவது கோரிக்கை சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வேண்டும் என்பது தான்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘செந்தில் பாலாஜி வாங்கும் 10 ரூபாயில் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு’ - சிவி சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details