இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம் - 2019 அடிப்படையில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச்சாளர அனுமதி எனப் பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாடு 14ஆவது இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை 2018ஆம் ஆண்டு 12ஆவது இடத்தில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை மத்திய அரசே வெளியிடுவதன் மூலம் மாநிலங்களிடையே தொழில் தொடங்குவதற்கான சீர்த்திருத்த நடவடிக்கைகளையும், தொழில் தொடங்க எளிதாக அனுமதி வழங்குவதிலும், போட்டித் தன்மையை வளர்த்து, முதலீடுகளை அதிகமாக பெறுவதற்கு வழிவகை செய்கிறது.