கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது அமெரிக்கா, நெதர்லாந்து, சவுதி அரேபியா, கத்தாா், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் நாடு திரும்பினர்.
நேற்று மாலை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து 139 பேர் சென்னை வந்தனர். அதில் ஆண்கள் 90, பெண்கள் 45, சிறுவர்கள் 4 பேர் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களுக்கு இரண்டு பேர் மட்டுமே சென்றனர். மீதமுள்ள 137 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று இரவு சவுதி அரேபியாவிலிருந்து சிறப்பு மீட்பு விமானத்தில் 139 இந்தியர்கள் சென்னை வந்தனர். அதில் ஆண்கள் 140, பெண்கள் 16, சிறுவர் 6 பேர் ஆகும். இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கு 119 பேரும், கட்டணம் செலுத்தும் ஹோட்டல்களுக்கு 43 பேரும் அனுப்பப்பட்டனர்.
கத்தார் நாட்டின் தோகா நகரிலிருந்து 212 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் ஆண்கள் 168, பெண்கள் 35, சிறுவா் 5, குழந்தை 4 ஆகியோருக்கு விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கு 168 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர ஹோட்டல்களுக்கு 44 பேரும் அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 56 இந்தியர்களுடன் டெல்லி வழியாக நேற்று இரவு சென்னை வந்தது. அதில் ஆண்கள் 27, பெண்கள் 24, சிறுவா் 5 என்று அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கு 7 பேரும்,கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டலுக்கு 49 பேரும் அனுப்பப்பட்டனர்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரிலிருந்து 112 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று நள்ளிரவு சென்னை வந்தது. அதில் ஆண்கள் 64, பெண்கள் 34, சிறுவர் 12, குழந்தை 2 என அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவா்களில் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கு 6 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர ஹோட்டல்களுக்கு 100 போ் அனுப்பப்பட்டனர். சிறப்பு அனுமதியின் பேரில் விருதுநகர் மாவட்டத்திற்கு 6 பேர் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலிருந்து இன்று அதிகாலை சிறப்பு மீட்பு விமானம் 153 இந்தியர்களுடன் சென்னை வந்தது.அதில் ஆண்கள் 110,பெண்கள் 37, சிறுவர்கள் 3, குழந்தைகள் 3 ஆகியோருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவர்கள் தாய்லாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்பதால் அவர்களை அந்த நிறுவனமே, 14 நாட்கள் தனிமைப்படுத்த சென்னை நகர ஹோட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர்.