சென்னை: சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் கபாடி அணியின் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், இன்று (அக்.15) அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் கபாடி வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர் மற்றும் கபாடி பயிற்சியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர், கவிதா செல்வராஜ்-க்கு பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். பின், செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா செல்வராஜ் கூறுகையில், ‘சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபாடி அணியின் பயிற்சியாளராக இருந்து பெரும் பங்காற்றி உள்ளேன்.
தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஏற்கனவே இந்திய மகளிர் கபாடி அணியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கேப்டனாக இருந்து, தங்கப்பதக்கங்களை வென்று உள்ளேன். இதனால் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமையை சேர்த்து உள்ளேன்.