சென்னை: இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் அளித்த மனுவில், "அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கக்கூடிய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
75 விழுக்காடு கட்டணம் என்பது மொத்த கட்டணத்தில் 25 விழுக்காடு குறைப்பதா அல்லது கல்விக் கட்டணத்தில் 25 விழுக்காடு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களது கட்டணத்தை வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை நிபந்தனையின்றி உடனே வழங்க வேண்டும்.
கல்வித் தொலைக்காட்சியில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விபெறும் வகையில் உரிய ஏற்பாடுசெய்ய வேண்டும்.
முன்னாள் நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு தங்கள் பள்ளிக்கு நிர்ணயித்த கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் கோரிக்கை மனுவை இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பள்ளிக் கல்வி இயக்குநரிடம் வழங்கினர்.