சென்னை:சென்னையில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.14) வெளியிட்ட அறிவிப்பில், "கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை (நவ.15) பெய்யக்கூடும். இதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழையை சாமாளிக்க அலர்ட்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய பகுதிகளில் மழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக, தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கனமழையை சமாளித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு' தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடரும்:தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் இன்று வெளியிட்ட தகவலில், 'தமிழகத்தில், அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.