சென்னை:இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி சங்கரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “மத்திய அரசால் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை துறைமுகம், புதிய மும்பை, கொச்சின் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 18 கடல்சார் பயிற்சிக் கல்வி நிறுவனங்களும் இணைப்பு பெற்றுள்ளன. இளநிலை, முதுநிலை பிவிசி ஆராய்ச்சிப் படிப்புகளை கடல்சார் பல்கலைக்கழகத்தில் வழங்கி வருகிறோம். பிடெக் மெரைன் இன்ஜினியரிங், எம்பிஏ, பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ், ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
13 ஆயிரம் பேர் விண்ணப்பம்
கடல் சார் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 40 விழுக்காடு கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து சுமார் 500 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கேரளாவில் கடல்சார் படிப்பு முடிப்பவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்கனவே அதிக அளவில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கடல்சார் படிப்பில் சேர்வதற்கு போதுமான விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாமல் இருக்கிறது. எனவே அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
80 விழுக்காடு வேலைவாய்ப்பு
கடல்சார் படிப்ப்பை முடிப்பவர்களுக்கு 80 விழுக்காடு வேலைவாய்ப்பும், அதிக அளவிலான சம்பளமும் கிடைக்கிறது. மேலும் இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் உணவு, உறைவிட செலவு உள்பட கல்விக்கட்டணம் தனியார் கடல்சார் கல்வி நிறுவனங்களை விட குறைவாகவே உள்ளது.
துணைவேந்தர் மாலினி சங்கரன் இந்தப் படிப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கம். தற்போது கரோனா காலம் என்பதால் குறிப்பிட்ட காலத்தில் வகுப்புகள் தொடங்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு மாணவர்கள் கடல் சார் படிப்புகளில் சேர்ந்து பயில வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ’தோளில் போட்டிருக்கும் துண்டு போன்றது கூட்டணி’ - செல்லூர் ராஜூ