தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளமளவென உயரும் சம்பளம்.. ஆளின்றி தவிக்கும் மென்பொருள் நிறுவனங்கள்.. சிக்கல் என்ன? - Infosys

மென்பொருள் துறையில் கரோனா காலம் சிலருக்கு மும்மடங்கு சம்பளத்தைக் கொடுத்துள்ள நிலையில், ஊழியர்கள் வேறுநிறுவனங்களுக்கு செல்ல விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆளின்றி தவிக்கும் ஐ.டி. நிறுவனங்கள்
ஆளின்றி தவிக்கும் ஐ.டி. நிறுவனங்கள்

By

Published : Apr 29, 2022, 6:05 PM IST

Updated : Sep 10, 2022, 5:35 PM IST

ஹைதராபாத் : இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமாக ‘இன்போசிஸ்’ தனது ஊழியர்களுக்கு விடுத்த அதிரடி சுற்றறிக்கை, பலரின் புருவங்களை உயரச் செய்துள்ளது. மென்பொருள் ஊழியர்கள் கூட்டமைப்புகள் எதிர்க்குரல்களையும் விடுக்கின்றன. அப்படி என்ன கூறப்பட்டுள்ளது அந்த அறிக்கையில்?. இன்போசிஸ் உலகெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் சேவையை வழங்கி வருகிறது.

அவ்வாறு இன்போசிஸின் வாடிக்கையாளராக உள்ள நிறுவனம், இன்போசிஸின் ஊழியரை நேரடியாக வேலைக்கு எடுக்க முடியாது. அதே வாடிக்கையாளரைக் கொண்ட வேறு மென்பொருள் நிறுவனத்திலும் அந்த ஊழியர் சேர முடியாது. பணியிலிருந்து விலகினாலும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு இன்போசிஸின் விதிகள் அந்த ஊழியரை கட்டுப்படுத்தும். இதனை மீறினால் இன்போசிஸ் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த விதிகளுக்கான காரணம் என்ன? எதிர்க்குரல்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

உலக நாடுகளில் இந்தியாவுக்கான தனி அடையாளத்தை மென்பொருள் துறை கொடுத்துள்ளது எனலாம். 90களின் இறுதியிலும் 2000ம் ஆண்டுக்கு பின்னும் இந்திய சமூகத்தில் ஒரு புதிய பொருளாதார அடுக்கு உருவானதில் முக்கிய பங்கு மென்பொருள் துறைக்கு உள்ளது. சாதாரண வீட்டுப்பிள்ளைகளும் பொறியியல் படிப்புடன், நல்ல தகவல் தொடர்புத்திறன் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொண்டால் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருந்தன.

மென்பொருள் நிறுவனங்கள் இவர்களை பணிக்கு எடுத்து ஆயிரங்களில் துவங்கி லட்சங்களில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தன. இருந்தாலும் இந்த துறையில் திடீர் சரிவுகளுக்கும் வாய்ப்புகள் இருந்தன. மலைக்க வைக்கும் பணி இலக்குகள், பணி திறனை காரணம் காட்டி பறிக்கப்படும் வாய்ப்புகள், வேலை இழப்பு என அபாயங்களும் நிறைந்தது தான் மென்பொருள் துறை.

குமாஸ்தா வேலையல்ல: பொதுவாக இந்தியர்கள் பழமையான சிந்தனை கொண்டவர்கள் என்பார்கள். அதாவது, காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கு முடியும் அலுவலகப் பணியை பெரிதும் விரும்புபவர்கள். ஆனால் இந்த குமாஸ்தா வேலையல்ல மென்பொருள் வேலை. அது, மூளைக்கு ஏற்ப வேலையும், சம்பளமும் கொடுக்கவல்லது. நுனி நாக்கு ஆங்கிலம், கவர்ச்சிகரமான பணிச்சூழல், மளமளவென உயரும் பொருளாதாரம் என இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிறைந்திருக்கும் மென்பொருள் துறை கொரோனா ஊரடங்கு காலத்தில் வினோதமான சிக்கல் ஒன்றை எதிர்கொள்ள நேரிட்டது.

நடுவுல கொஞ்சம்பேரை காணோம்:ஆம் மென்பொருள் துறையில் தற்போது இருக்கும் சிக்கல் நடுவில்தான் இருக்கிறது. நிறுவனத்தை மேலாண்மை செய்யும் உயர்பதவியில் இருப்போருக்கு எந்த சிக்கலும் இல்லை. அதே போல துவக்க நிலையில் பணியாற்றுபவர்களுக்கும் சிக்கல் இல்லை. ஆனால் இடைநிலையில் பணியாற்றும் டீம் லீடர்கள் அதாவது குழு தலைவர்கள் மட்டத்திலான திறன் படைத்த ஊழியர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கரோனா கொடுத்த கொடை: கரோனாவின் தயவால் வீட்டிலிருந்தே வேலை என்ற புதிய சாதாரண நிலைக்கு பழகிக் கொண்ட ஊழியர்கள், அதிக நேர பணி எந்நேரமும் அழைப்புக்கு தயாராக இருப்பது, சமூக உறவுகளை இழப்பது என்பது போன்ற புதுவித சிக்கல்களை எதிர்கொண்டனர். நிறுவனங்களுக்கு துவக்கத்தில் அதிக பணித்திறன். 24 மணி நேரமும் பணியாற்றும் ஊழியர்கள் என சாதகமாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட 3 வது ஆண்டாக வெற்றி நடை போடும் வீட்டிலிருந்து வேலை வேறு விதமான சிக்கல்களை நிறுவனங்களுக்கு கொடுத்தது.

புதியவர்கள் புதிதாகவே இருக்காங்க:ஏற்கெனவே நிறுவனங்களில் வேலை செய்து பழகியவர்கள் புதிய சூழலுக்கு எளிதில் தயாராகிவிட. புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் கல்லூரி சூழலிலிருந்து அலுவலக சூழலுக்கு தயாராக முடியவில்லை. வீட்டிலிருந்து பெறப்படும் பயிற்சியும் அவர்களை முழுமையான திறன்பெற்ற பணியாளர்களாக உருவாக்குவதில் 100 விழுக்காடு வெற்றி தரவில்லை என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க மிட் சீனியர்கள் எனப்படும் இடைநிலை பணி அனுபவம் பெற்றவர்களின் நிலை என்னவென்பதை அறிய மென்பொருள் வல்லுநரான சவுந்தர் தங்கராஜை அணுகினோம். நடுவுல கொஞ்சம் பேர் காணாமல் போனது பற்றி அவர் விளக்கமாக கூறினார். “ மென்பொருள் நிறுவனங்களில் 8 முதல் 10 ஆண்டு அனுபவம் உடையவர்கள் எந்த நிறுவனங்களிலும் இல்லை" என அதிர்ச்சி தரும் தகவலை கூறினார் அவர். இது ஏன் என கேட்டபோது ஆர்வத்துடன் மேலும் விளக்கத் தொடங்கினார்.

சுமார் 8-ல் இருந்து 10 ஆண்டுகள் அனுபவம் உடையவர்களை தான் ரிப்போர்ட்டிங் அதாவது குழுவை வழிநடத்தும் தலைமையாக நிறுவனங்களில் பணி கொடுப்பார்கள். ஆனால், இப்போது நிலைமை என்னவென்றால் குழுவில் பணி செய்ய பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், தலைமை இல்லை. இது தான் உண்மை நிலை என கூறினார். 15 வருட அனுபவம் உள்ள மேலாளர்கள் இருக்கிறார்கள், 8 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவம் உள்ள நபர்களும் இருக்கிறார்கள்.

இடைப்பட்ட அடுக்கு காணாமல் போய்விட்டது. உண்மையில் இவர்கள் எங்கேதான் போனார்கள் என கேட்டால், இங்கேயே தான் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாற்றி மாற்றி பேப்பர் போட்டு தாவிய வண்ணம் உள்ளனர் என்றார். இதனால் தான் சம்பளம் எகிறுகிறது. ஆள் பற்றாக்குறையால் பல நிறுவனங்கள் வேலை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் 200 விழுக்காடு ஊதிய உயர்வு என்றாலும் தருவதற்கும் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்கிறார் சவுந்தர்.

மென்பொருள் நிறுவனங்களைப் பொறுத்தவரையிலும் இது போன்ற நிலையை ‘ஹேங்கிங் பொசிஷன்’ என்கிறார்கள். ஆட்ரிஷன் (attrition) எனப்படும் ஊழியர்களை வேட்டையாடுவது ஐ.டி. நிறுவனங்களில் நடக்கிறது. உதாரணத்திற்கு அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டிற்கு இந்தியாவில் பல உள்நாட்டு நிறுவனங்கள் சேவை அளித்து வந்தன. ஆனால் வால்மார்ட் இந்தியாவில் தனி அலுவலகம் அமைத்ததும், தனக்காக மற்ற நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை 100 விழுக்காட்டிற்கும் மேல் சம்பளம் கொடுத்து வளைத்துப் போட்டதாக கருதலாம்.

இத்தனை நாள் வால்மார்ட்டின் பணிகளுக்காகவே திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கிய காக்னிசன்ட் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களையும் இழந்து, வாடிக்கையாளரையும் இழந்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக களமிறங்குவதால் பெருமளவு சேவை செலவீன தொகையை மிச்சப்படுத்துகின்றன. இரு நாடுகளிலும் பெரும் அளவில் வரிச்சலுகையை பெற்றுக் கொள்கின்றன. மென்பொருள் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நாஸ்காம் போன்ற அமைப்புகள் நியாயமான போட்டிக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும் நடைமுறையில் இதனை பின்பற்றுவதில்லை என கூறுகின்றனர்.

நிறுவனங்களின் இந்த கட்டுப்பாடுகள், எந்த சட்டவிதிகளுக்கும் உட்படாத உரிமை மீறல் என்கிறது. மென்பொருள் பணியாளர்களுக்கான கூட்டமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த வசுமதி வசந்தி, இது குறித்து ஈடிவி பாரத்துடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், நிறுவனத்திலிருந்து வெளியேறிய நபரை, சம்பளம் பெறாத ஒருவரை எப்படி கட்டுப்படுத்த முடியும் என கேள்வி எழுப்புகிறார். அப்படி கட்டுப்படுத்த விரும்பினால் அந்த குறிப்பிட்ட நபருக்கு 6 மாத சம்பளம் வழங்க நிறுவனங்கள் தயாரா? எனவும் கேள்விக்கணைகளை தொடுக்கிறார்.

6 மாதங்கள் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது. 6 மாதங்களில் மருத்துவ செலவுகள் வந்தால் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுமா? என்ன தைரியத்தில் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். 6 மாதங்களுக்கு ஊழியரின் செலவுகள் அனைத்தையும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளட்டும், நிறுவனங்கள் தாங்கள் வெளியேற்றும் ஊழியர்களிடம் இத்தகைய நியாய தர்மங்கள், கருணைகளை காட்டுகிறார்களா? என கேள்வி எழுப்பும் வசுமதி உங்களிடம் ஊழியராக இல்லாத நபர் எதற்காக உங்களின் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என வாதத்தை முன்வைக்கிறார்.

நிறுவனங்களின் இந்த கட்டுப்பாடுகள் எந்த சட்டவிதிகளுக்கும் உட்படாது என கூறும் வசுமதி, இது முற்றிலும் பணியாளர்களை மிரட்டும் நடவடிக்கை என்கிறார். நிலைமைக்கு ஏற்றாற்போல கொள்கைகளை மாற்றுவது தான் நிறுவனங்களுக்கு தீர்வு தரும் எனவும் வசுமதி கருத்து தெரிவிக்கிறார். இது போன்ற விதிகளால் இந்நிறுவனங்களில் பணிக்கு சேருபவர்கள் யோசிப்பார்கள் என்பதால் நிறுவனங்களுக்கு தான் பாதிப்பு என்கிறார். சர்வதேச அளவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என கூறும் வசுமதி, சிஇஓ அளவிலேயே பெரிய நிறுவனங்களில் மாற்றங்கள் நடப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் மனித வளத்திற்கு என்றும் குறைவே இல்லை. திறன்மிக்க பணியாளர்கள் நாளும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்தி போட்டி சூழலுக்கு ஏற்ற கொள்கை முடிவுகளை நிறுவனங்கள் வகுப்பதே நிரந்தர தீர்வு தரும் என்பது துறை சார் நிபுணர்களின் வாதமாக உள்ளது.

சங்கரநாராயணன்

இதையும் படிங்க:ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு அடித்த லக்கி; உழைப்பைப் பாராட்டி BMW காரை பரிசாக வழங்கிய ஐடி கம்பெனிகள்!

Last Updated : Sep 10, 2022, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details