தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய வரலாறு தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவது தான் முறை - முதலமைச்சர் - Stalin s speech

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி உண்மையான வரலாறை எழுத வேண்டும் என்றும்; இந்திய வரலாறு தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவது தான் முறை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை கிறித்துவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலின்
சென்னை கிறித்துவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலின்

By

Published : Dec 27, 2022, 4:01 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி அரங்கில், இந்திய வரலாற்று காங்கிரஸ் 81ஆவது அமர்வு, இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை அதன் செயலாளர் மகாலட்சுமி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிகழ்வினைத் தொடங்கி வைக்கிறார்.

உடன் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொணடனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 'இந்திய வராலாற்று பேரவையின் 81ஆவது மாநாடு இங்கு நடப்பது பெருமைப்பட வேண்டியது. இந்தியாவிலேயே கல்வெட்டுகளை எடுத்துக்கொண்டால், அதிகமான கல்வெட்டுகள் தமிழில் தான் உள்ளது’ என்றார்.

அதனையடுத்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'இந்தியாவின் வரலாறு எழுதப்படும்போது தென்னிந்தியாவின் வரலாறு சரியாக எழுதப்படவில்லை. இந்தியாவின் வரலாற்றை முழுமையாக எழுத வேண்டும். வரலாற்றை வரலாறாக ஆய்வு செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

அதன்பின்னர் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாட்டில் 26ஆண்டுகளுக்கு முன்பு 1996ஆம் ஆண்டு இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார்கள். இப்போது நடக்கும் மாநாட்டில், கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இந்திய வரலாற்று காங்கிரஸின் 81ஆவது மாநாட்டை, தமிழ்நாட்டில் நடத்த தேர்வு செய்ததற்கு நான் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உண்மையான வரலாற்றை அறிவியல் பூர்வமான வரலாற்றை வடித்து தருவது தான், இதன் முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது. மதச்சார்பற்ற அறிவுப்பூர்வமான வரலாற்றை எழுதுவதை ஊக்குவித்து வருகிறது. இன்றைய காலத்தின் தேவை என்பது, வரலாற்று உணர்வை ஊட்டுதல் என்னும் அறிவியல் பார்வையை உருவாக்குதல், வரலாற்றைப் படித்தால் வேலை கிடைக்குமா, சம்பளம் கிடைக்குமா என்பது பலருடைய எண்ணமாக இருந்து வருகிறது. வரலாறு என்பது படிப்பிற்காக, சம்பளத்திற்காக அல்ல... அறிந்து கொள்வதற்காக வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும் தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படைக்கக் கூடிய வரலாறு அறிவியல் பூர்வமான, உண்மையான வகையில் அமைந்திட வேண்டும்.

கற்பனை கதைகளை சிலர் வரலாறுகளாக சொல்லிக்கொள்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. ஏற்கக்கூடாது, அறிவு மிக்க சமூகம் அதனை ஏற்காது. இன்று நாட்டை சூழ்ந்த ஆபத்து என்பது இந்த வரலாற்று திரிபு தான். கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், அனைத்திலும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின் மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும். இத்தகைய சூழலில் இந்த அமைப்பின் பணி மிக முக்கியமானது.

1994ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மையாகும். அதை எந்த வகையில் மீறுவதையும் அனுமதிக்க முடியாது.

எந்த ஒரு கட்சியும் மதவாத கட்சியாக இயங்க அனுமதிக்கக்கூடாது, பல்வேறு மதங்களை பின்பற்றக் கூடியவர்களிடம் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள்ளேயே பிரிவினையினை தூண்டுகிற சக்தியை அனுமதித்தால் ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதச்சார்பற்ற அரசு, அந்த சக்திகளை கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலையில் கொண்டுவர வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும், இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படி தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள் இந்த வேற்றுமைகளை ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும். பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி உண்மையான வரலாற்றை எழுதப்பட வேண்டும்.

தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு. இங்கு இந்த மாநாடு நடப்பது மிகப் பொருத்தமானது.
நாங்கள் பழம் பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான். ஆனால், பழமை வாதிகள் அல்ல. அறிவியல் பூர்வமான ஆதாரப்பூர்வமான எங்கள் வரலாற்றுப் பெருமைகளை பேசுகிறோம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு அழகாக எடுத்துச்சொன்னார்கள். கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், குடுமணல், மயிலாடுபாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே நகர மயமாக்கம் ஏற்பட்டது; எழுத்தறிவு பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியது, தமிழ்ச்சமூகம். இதனை கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது.

சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமிழ் நீங்கிய நெல் மணிகள் காலம் கி.மு 1150 என கண்டறியப்பட்டுள்ளது. தன்பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல் பூர்வ ஆய்வின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதமே இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் 7 இடங்களில் இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. பூனேவில் உள்ள புவிகாந்த நிறுவனம், பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற அறிவியல் துணையோடு அறிவியல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி செய்கிறோம்.

இந்த அகழாய்வு முடிவுகளை சட்டமன்றத்தில் அறிவித்துள்ளேன். கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடந்த கால, கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றியை ஆவணப்படுத்தக் கூடிய அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம். இவை தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தொடர்பை பெற்றிருக்கிறது.

இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்ப்பற்ற அறிவியல் வழிப்பட்ட வரலாற்று பெருமிதங்கள் ஆகும். இத்தகைய வரலாற்று உணர்வை உண்மையான வரலாற்றை, ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து செயல்படுத்தி இருக்கிறோம்.

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு பழந்தமிகத்தின் நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவது தான் முறையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். தமிழினத்தின் மீட்கும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. திராவிட கட்டட கலையை பறைசாற்றும் வானுயர கோயில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம்.

கீழடியில் ஆதன் என்றும், குவியன் என்றும் சங்க கால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள்ன் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவற்றை மேலும் செழுமைப்படுத்திட ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இந்திய வரலாற்று மாநாடு வழங்கினால் அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம்.

தொல்லியல் மற்றும் அருங்காட்சியகயியல் தொடர்பான வல்லுநர்களை உருவாக்க இளங்கலை பட்டப்படிப்பை, இந்த கல்லூரி வழங்குவது மகிழ்ச்சியடைகிறேன். வரலாற்றை படிப்போம். வரலாற்றை படைப்போம்’ எனப் பேசினார்.

இதையும் படிங்க:இபிஎஸ் அணி மா.செ கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details